4.7.2016 கல்வெட்டில் முதல்குறள் பற்றிய செய்திகள்… பத்திரிக்கைச் செய்திகள்
பல நாடுகளின் தோல்விக்கான காரணத்தை கண்டுபிடித்ததால்தான் இந்தியா முதல் முறையிலேயே மங்கல்யான் விண்கலத்தை செவ்வாய்கிரகத்திற்கு அனப்புவதில் வெற்றி பெற்றது மலையம்பாளையத்தில் நடந்த விழாவில் இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாத்துரை தகவல் கோபி, ஜூலை 5 சென்னை குறள்மலைச்சங்கம் சார்பில், ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகில் உள்ள மலையப்பாளையத்தில் உள்ள உதயகிரி முத்துவேலாயுதசாமி கோவிலில் கல்வெட்டில் முதல் திருக்குறள் எழுதப்பட்டுள்ளது.
இதன் அரங்கேற்ற விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமை தாங்கினார். குறள்மலைச்சங்கத்தின் நிறுவனர் ரவிக்குமார் வரவேற்று பேசினார். சென்னை வி.ஜி.பி. தலைவர் வி.ஜி.சந்தோஷம் முன்னிலை வகித்தார். விழாவில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் பெங்களூரின் இயக்குனர் மயில்சாமி அண்ணாத்துரை கலந்து கொண்டு கல்வெட்டில் முதல் திருக்குறளை அறங்கேற்றம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, திருக்குறளை கல்வெட்டில் பதிப்பது என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட நாள் இந்த நாள் ஆகும்.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை உழைப்பதும், ஞாயிற்றுக்கிழமை என்பது ஓய்வு எடுப்பதற்கான நாள் அல்ல. அன்று நம்மை நாம் புதுப்பித்து கொள்ளும் நாள் ஆகும். அவ்வாறு புதுப்பித்து கொண்டால் மட்டுமே அடுத்த வாரம் சிறப்பாக பணியாற்ற முடியும். நம்முடைய உணர்வுகளை புதுப்பித்து கொள்ளும் நாள் ஞாயிற்றுக்கிழமையாகும். திருக்குறளை தினமும் படிக்க வேண்டும். அதை புரிந்து கொண்டு, அதன்படி நாம் வாழ்க்கையில் வாழ வேண்டும்.
இங்கு திருக்குறள் கல்லில் பதியப்பட்டிருப்பது போல், ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், மனதிலும் பதிய வேண்டும். ஒவ்வொரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று திருவள்ளுவர் கூறி உள்ளார்.
கற்றவர்கள் படித்து முடித்து விட்டு முடங்கி கிடக்க கூடாது. அவர்கள் மேல்நிலைக்கு வர வேண்டும். எப்படி கற்க வேண்டும் என்பதை கற்க கசடற கற்றப்பின் நிற்க அதற்கு தக என்ற குறளில் கூறப்பட்டுள்ளது. நாம் வாழ்க்கையில் இசைப்பட வாழ வேண்டும் . இசைபட வாழ வேண்டும் என்பது, பிறர் வசைப்படாமல் வாழ்வதாகும். பிறர் வசைப்படும் வகையில் வாழ்வதை விட இறந்து விடுவது நல்லது.
செவ்வாய் கிரகம் ஒவ்வொரு வினாடியும் 39 கிலோ மீட்டர் கடந்து செல்கிறது. அதை அடைய மங்கல்யான் சென்றது. செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் செல்வதற்கு 8 முதல் 9 மாதங்கள் ஆகும். இதற்கான முயற்சியில் சிறு பிழை ஏற்பட்டால் கூட, சிறிய காலதாதம் ஆனால் கூட அதை அடைவதற்கான முயற்சிகள் தோல்வி அடைந்து விடும். செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்புவதற்கு அமெரிக்கா 5 முறை முயற்சி செய்து, 6 வது முறை வெற்றி பெற்றது. ரஷ்யா 9வது முறைதான் வெற்றி பெற்றது. சீனா, ஜப்பானால் ஜெயிக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் மங்கல்யான் விண்கலத்தை அனுப்ப முயற்சி செய்த போது, இந்தியா எப்படி ஜெயிக்க போகிறது என்ற கேள்வி எழுந்தது. இந்தியா மங்கல்யான் விண்கலத்தை அனுப்புவதற்கு முன், தோல்வியுற்ற நாடுகள் எல்லாம் எதனால் தோல்வியுற்றன என்ற காரணத்தை கண்டுபிடித்து, அதை சரி செய்ததால் தான் முதன் முயற்சியிலேயே செவ்வாய்கிரகத்திற்கு மங்கல்யான் விண்கலம் வெற்றிகரமாக சென்று சேர்ந்தது.
ஒவ்வொரு தோல்வியும் தான் வெற்றிக்கு முதல்படி. அதற்காக தோல்வி அடைந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற அவசியம் இல்லை. மற்றவர்களின் தோல்வியை நாம் பாடமாக எடுத்து கொண்டால், அது நமக்குவெற்றியை கொடுக்கும். இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை பேசினார். அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது, திருக்குறள் ஓலைச்சுவடியில் இருந்து, பேப்பர் அதன் பின்னர் கம்ப்யூட்டர் என்று மாற்றுவடிவத்தை பெற்றுள்ளது. உலகபொதுமறையான திருக்குறளை கல்வெட்டில் பதிப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியை அரசு, தன்னார்வலர்கள், பொதுமக்கள் செய்ய முன்வந்தால், திருக்குறளை அடுத்த தலைமுறையினரிடமும் பதிவு செய்யலாம் என்றார். விழாவிற்கு தலைமை தாங்கிய நீதிபதி ஆர்.மகாதேவன் பேசும் போது, ஒவ்வொரு மனித ம் திருக்குறளை மனதில் கொண்டு வாழ்ந்தால் மனிதனாக வாழலாம் என்றார். விழாவில் கவிஞர் கவிதாசன், பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் மொழிபெயர்ப்பு பயிலகத்தின் இயக்குனர் பாலசுப்பிரமணியம், குமாரபாளையம் எஸ்.எஸ்.மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் வெற்றிவேல் நன்றி கூறினார்.