உலகத் திருக்குறள் மாநாடு 2022

International Thirukkural Conference 2022
தமிழக ஆளுநர். ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாநாட்டினை தொடங்கி வைத்து உரையாற்றினார். மேலும் ஆளுநர் “கல்வெட்டில் திருக்குறள் 6” என்ற திருக்குறள் நூலினை வெளியிட்டார். முன்னதாக கோவை, ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி வரவேற்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் 10 மாணவர்களுக்கு சிறந்த தமிழ் மாணாக்கர் என்ற சான்றிதழ் வழங்கியும், 5 தமிழ் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கியும் கெளரவித்தார். குறள் மலை பெருநீதிப் பெருமகனார் விருது சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் நீதிபதி என்.கிருபாகரன், குறள் மலை வாழ் நாள் சாதனையாளர் விருது கோவை, கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் நல்லா.ஜி.பழனிசாமி, குறள்மலை மனுநீதிச் சோழன் விருது, கோவை, மனுநீதி அறக்கட்டளையின் தலைவர் மனுநீதி மாணிக்கம் மற்றும் குறள்மலை சிறந்தகல்வியாளர் விருது கோவை, எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனத்தின் தலைவர் மணிமேகலை மோகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நீதிபதி கிருபாகரன் பேசுகையில் ஒவ்வொரு வீட்டிலும் திருக்குறள் ஒலிக்க வேண்டும் . நாம் இதில் உள்ள நல்ல விஷயங்களை வாழ்க்கைக்கு பயன்படுத்த வேண்டும். நாம் அனைவரும் இதன் முக்கியத்தினை குழந்தைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும், திருக்குறள் மூலம் நமது கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும். தமிழின் முக்கியத்தினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். மொழியை வளர்ப்பதன் மூலம் அம்மொழி பேசும் மக்களை வளர்த்தி, நாட்டை முன்னேற்ற முடியும் எனக் கூறினார்.
விழாவில் தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி பேசியதாவது “நமது தேசம் புண்ணிய பூமி, சான்றோர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், வாழ்ந்த நாடு.. திருக்குறளில் எவ்வாறு முறையாக வாழ்வது என்பது குறித்து கூறப்பட்டுள்ளது. திருக்குறளின் மகிமை பாதுகாக்க வேண்டும். நாம் நல்ல மனிதராக வாழ திருக்குறளினை தினமும் படித்து, அதை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். அமைதியான வாழ்க்கையை நடத்த திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளது. திருக்குறளில் உள்ள ஒவ்வொரு வரியும் பல நல்ல விஷயங்களை எடுத்துக் கூறுகிறது. ஒவ்வொரு குறளிலும் உள்ள ஏழு வார்த்தைகளையும் உண்மையாக புரிந்து படித்தால் வாழ்க்கையில் எல்லோரும் போற்றும் நிலையை அடைய முடியும். திருக்குறள் நமது வாழ்க்கையை உயர்த்தும் ஏணியாக உள்ளது. வாழ்க்கையில் முன்னேற நல்ல செயல்களை பின்பற்றுங்கள். திருக்குறள் உலகிற்கு ஒரு உதாரணமாக உள்ளது என்று கூறினார்.
மேலும்இம்மாநாட்டில் 1330 திருக்குறளையும் மலையிலே கல்வெட்டில் பதித்து திருக்குறள் மலை உருவாக்கப்பட வேண்டும், மலையிலே கல்வெட்டில் பதிக்கப்படும் திருக்குறளை உலக நூலாக யுனெஸ்கோ நிறுவனம் அங்கீகரிக்க வேண்டும் மற்றும் உலக நூலாக அறிவிக்கப்பட இருக்கும் திருக்குறளை ஐக்கிய நாடுகள் சபை தன் உறுப்பு நாடுகள் அனைத்திலும் பாடத்திட்டமாக திருக்குறளை சேர்க்க ஆவண செய்யவேண்டும் போன்ற மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறள் மலைசங்கத்தின் தலைவர் பி.ரவிக்குமார் இந்த நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து, நிறைவாக நன்றியுரை ஆற்றினார்.