திருக்குறளை மேற்கோள் காட்டி லடாக் எல்லையில் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் எழுச்சி உரை

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு                 குறள் 766

வீரம், மானம், மாட்சிமை மிக்க நடைத்திறன், குறிக்கோளில் தெளிவு என்பன நான்கும் படைக்குப் பாதுகாப்பாய் அமையும் என்று திருக்குறளைக் குறிப்பிட்டு, 3.7.2020 அன்று லடாக்கில் ராணுவத்தினர் மத்தியில் வீர உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய வீரர்களின் வீரத்தையும் தீரத்தையும் பாரட்டினார். இந்திய நாட்டைக்காக்க உயிர்நீத்த வீரர்களுக்காக சிந்து நதியில் மலர்கள் தூவி, அஞ்சலி செலுத்திய பின், நமது நாட்டு வீரர்களின் வீரத்தைப் பார்த்து அண்டை நாடுகள் பயப்படுவதாக கூறி எழுச்சியுரை நிகழ்த்தினார்.

உங்களது அர்ப்பணிப்பு உணர்வு உலகத்தில் வேறு யாருக்கும் கிடையாது. இந்த ஒட்டுமொத்த நாடும் ராணுவவீரர்களான உங்கள் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளது. உங்களது மனவலிமை, உங்களை சுற்றியுள்ள இந்த மலைக் குன்றுகளை விட அதிகமானதாக இருக்கிறது.

உங்களது வீரம் இந்த மலையின் உயரத்தை விட அதிகமாக இருக்கிறது. உங்களது வீரத்தால் இந்தியத்தாய் பெருமிதம் கொண்டு நிற்கிறாள். நீங்கள் காட்டி வரும் இந்த வீரம் உலக நாடுகள் அனைத்தாலும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. இந்த நாடு உங்களது கைகளில் பாதுகாப்பாக இருக்கிறது. நீங்கள் பாரத மாதாவின் கவசங்கள். இந்தியா எந்த ஒரு சவாலையும் முறியடித்து வெற்றி பெறும் வலிமை கொண்ட நாடு. அஞ்சமாட்டோம் இந்தியா அமைதியை விரும்பும் நாடு. இதை உலகம் பலமுறை பார்த்துள்ளது.

அதேநேரம், நமது நிலப்பகுதியை பாதுகாப்பதில் நாம் என்றுமே அஞ்சி பின்வாங்கியது கிடையாது. அமைதியை விரும்பும் நாம், தேவைப்பட்டால் களத்தில் எதிரிகளை சந்திக்கவும் தயங்கமாட்டோம் என்றும் மோடி கூறியுள்ளார்.

நாடு பிடிக்கும் காலம் மலையேறிவிட்டது., இந்திய ராணுவத்தின் நெருப்பு போன்ற ஆக்ரோசத்தை எதிரிகள் பார்த்துள்ளனர். நமது நிலத்தை பாதுகாக்கும் விவகாரத்தில் நாம் ஒருபோதும் அச்சம் கொள்ளப்போவதில்லை நாடு பிடிக்கும் காலம் என்பது மலையேறிச் சென்றுவிட்டது. உங்களால் நாட்டு மக்கள் பெருமையடைகிறார்கள். சுயசார்பு இந்தியா என்பது உங்களால் நிறைவேறும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

எங்கள் கைகளில் புல்லாங்குழல் இருக்கும் அதே நேரத்தில் தேவைப்படும் போது சுதர்சன சக்கரத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம். ”அமைதியை விரும்பும் அதே நேரத்தில், நம்மைச் சீண்டுவோரை நாம் ஒருபோதும் விடமாட்டோம்” பாரத் மாதா கி ஜே, வந்தே மாதரம் என்று வீரர்கள் மத்தியில் வீர உரையாற்றி தான் எப்போதும் தேசப்பற்றுமிக்க, தைரியமான பிரதமர் என்று நிரூபித்துள்ளார்.