நோக்கம்

நோக்கம்

முக்காலத்திற்குமேற்ற முதன்மைக் கருத்துக்களை தொடர்ந்து வழங்கி, அறிவுப்பெட்டகமாக இருந்து, உலகப் பெரும் தீமைகளையெல்லாம் தீர்க்கவல்லதுமான மாமருந்தாய்த் திகழ்கின்றது நமது திருக்குறள். திருக்குறள் வேறு தமிழ் வேறு அல்ல. திருக்குறளைப் போற்றுவதும் தமிழைப் போற்றுவதும் ஒன்றுதான். இந்த வகையில் 1330 குறள்களையும் உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுக்களாக மலையில் பொறித்து, பல ஆயிரம் ஆண்டுகளானாலும், பல லட்சம் ஆண்டுகளானாலும் தமிழ் எப்படி சிறந்து விளங்கியது? தமிழர்கள் எப்படி சிறந்தோங்கி வாழ்ந்திருந்தார்கள் என்பதை உலகிற்கு பறைசாற்றும் விதமாக இவ்வுலகிற்கு விட்டுச் செல்லவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திறகாக…,1330 குறள்களையும் உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுக்களாக மலையில் பொறிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, குறள் மலை உருவாக்கப்பட்ட பின் திருக்குறள் ஆராய்ச்சிக் கூடம் நிறுவியும், விழா மண்டபங்களை உருவாக்கியும், வருடத்தின் 365 நாட்களிலும் தொடர்ந்து திருக்குறள் விழாக்கள் தமிழ் விழாக்கள் இங்கு நடத்தப்படவேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு குறள் மலைச்சங்கம் சார்பாக பல ஆண்டுகளாக மனு அளித்து வந்தோம்.

குறள் மலை ஆய்வு

திருச்சி உச்சிப் பிள்ளையார் கொவில் மலை, பழநி மலை, பவள மலை, பச்சை மலை, சிவன் மலை, ஓதி மலை போன்ற பல மலைகளை குறள் மலைச் சங்கம் ஆய்வு நடத்தியது. திருச்சி உச்சிப் பிள்ளையார் கொவில் மலை செங்குத்தாக இருக்கிறது என்றும் இங்கு கல்வெட்டுக்கள் அமைப்பது இயலாதது என்றும் சிற்பிகள் கூறிவிட்டார்கள். தொடர்ந்து பழநி மலை, பவள மலை, பச்சை மலை, சிவன் மலை, ஓதி மலை போன்ற பல மலைகள் மண் திட்டுக்களாலும், மரம் செடி கொடிகளாலும் சூழப்பட்டிருப்பதால் கல்வெட்டுக்கள் அமைப்பது சாத்தியமில்லாதது என்றும் சிற்பிகள் கூறிவிட்டார்கள்.

இறுதியாக ஈரோடு மாவட்டம் மலையப்பாளையத்தில் அமைந்துள்ள மலை ஆய்வு செய்யப்பட்டது. இந்த மலை ஒரே பாறையாலானதாகவும், வட்ட வடிவத்திலும், சுமார் 100 அடி உயரமே உடையதாகவும், 20.5 ஏக்கர் பரப்பு கொண்டதாகவும் அமைந்துள்ளது. மலை உச்சியில் தமிழ்க்கடவுள் முருகன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்றும், இந்த ஆலயத்தின் சுற்றுச் சுவர்கள், பிரகாரங்கள், படிக்கட்டுகள், வாயில்கள், மூலவர் உட்பட, பயன்படுத்தப்பட்டிருக்கும் அனைத்துக் கற்களுமே இதே மலையிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டவை என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

இவ்வளவு ஸ்திரத்தன்மை உடைய பாறையைக் கொண்ட மலையாக இந்த மலை இருப்பதால், இந்த மலையே குறள் பதிக்க ஏற்ற இடம் என்று முடிவு செய்து, கல்வெட்டுக்கள் பதிக்க அரசுக்கு தொடர்ந்து மனுக்கள் செய்தோம்.

இது சம்பந்தமாக மேனாள் குடியரசுத்தலைவர் திரு.ஏ.பி.ஜே.அப்துல்கலாம், மேனாள் உச்சநீதிமன்ற நீதியரசர் திரு.சதாசிவம் உட்பட பலருடனும் கலந்தாய்வு நடத்தப்பட்டது.