திருக்குறள் கல்வெட்டுகள்

திருக்குறள் கல்வெட்டுகள்

நோக்கம்

முக்காலத்திற்குமேற்ற முதன்மைக் கருத்துக்களை தொடர்ந்து வழங்கி, அறிவுப்பெட்டகமாக இருந்து, உலகப் பெரும் தீமைகளையெல்லாம் தீர்க்க வல்லதுமான மாமருந்தாய்த் திகழ்கின்றது நமது திருக்குறள். திருக்குறள் வேறு தமிழ் வேறு அல்ல. திருக்குறளைப் போற்றுவதும் தமிழைப் போற்றுவதும் ஒன்றுதான்.இந்த வகையில் 1330 குறள்களையும் உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுகளாகமலையில் பொறித்து, பல ஆயிரம் ஆண்டுகளானாலும், பல லட்சம் ஆண்டுகளானாலும் தமிழ் எப்படி சிறந்து விளங்கியது? தமிழர்கள் எப்படி சிறந்தோங்கி வாழ்ந்திருந்தார்கள் என்பதை உலகிற்கு பறைசாற்றும் விதமாக இவ்வுலகிற்கு விட்டுச் செல்லவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திறகாக…, 1330 குறள்களையும்  உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுக்களாக மலையில் பொறிக்க வேண்டும் என்று திட்டமிட்டு,குறள் மலை உருவாக்கப்பட்ட பின் திருக்குறள் ஆராய்ச்சிக் கூடம் நிறுவியும், விழா மண்டபங்களை உருவாக்கியும், வருடத்தின் 365 நாட்களிலும் தொடர்ந்து திருக்குறள் விழாக்கள் தமிழ் விழாக்கள் இங்கு நடத்தப்படவேண்டும் எனதமிழ்நாடு அரசுக்கு குறள் மலைச்சங்கம் சார்பாக பல ஆண்டுகளாக மனு அளித்து வந்தோம்.

குறள் மலை ஆய்வு

திருச்சி உச்சிப் பிள்ளையார் கொவில் மலை, பழநி மலை, பவள மலை, பச்சை மலை, சிவன் மலை, ஓதி மலை போன்ற பல மலைகளை குறள் மலைச் சங்கம் ஆய்வு நடத்தியது.திருச்சி உச்சிப் பிள்ளையார் கொவில் மலை செங்குத்தாக இருக்கிறது என்றும் இங்கு கல்வெட்டுக்கள் அமைப்பது இயலாதது என்றும் சிற்பிகள் கூறிவிட்டார்கள். தொடர்ந்து பழநி மலை, பவள மலை, பச்சை மலை, சிவன் மலை, ஓதி மலை போன்ற பல மலைகள் மண் திட்டுக்களாலும், மரம் செடி கொடிகளாலும் சூழப்பட்டிருப்பதால் கல்வெட்டுக்கள் அமைப்பது சாத்தியமில்லாதது  என்றும் சிற்பிகள் கூறிவிட்டார்கள். இறுதியாக ஈரோடு மாவட்டம் மலையப்பாளையத்தில் அமைந்துள்ள மலை ஆய்வு செய்யப்பட்டது.இந்த மலை ஒரே பாறையாலானதாகவும், வட்ட வடிவத்திலும், சுமார் 100 அடி உயரமே உடையதாகவும், 20.5 ஏக்கர் பரப்பு கொண்டதாகவும் அமைந்துள்ளது.மலை உச்சியில் தமிழ்க்கடவுள் முருகன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்றும், இந்த ஆலயத்தின் சுற்றுச் சுவர்கள், பிரகாரங்கள், படிக்கட்டுகள், வாயில்கள், மூலவர் உட்பட, பயன்படுத்தப்பட்டிருக்கும் அனைத்துக் கற்களுமே இதே மலையிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டவை என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

இவ்வளவு ஸ்திரத்தன்மை உடைய பாறையைக் கொண்ட மலையாக இந்த மலை இருப்பதால், இந்த மலையே குறள் பதிக்க ஏற்ற இடம் என்று முடிவு செய்து, கல்வெட்டுக்கள் பதிக்க அரசுக்கு தொடர்ந்து மனுக்கள் செய்தோம். 

இது சம்பந்தமாக மேனாள் குடியரசுத்தலைவர் திரு.ஏ.பி.ஜே.அப்துல்கலாம், மேனாள் உச்சநீதிமன்ற நீதியரசர் திரு.சதாசிவம் உட்பட பலருடனும் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

அரசு கவனமுடன் பரிசீலித்து, அரசு அதிகாரிகளைக் கொண்டு மலையை ஆய்வு செய்து, எமது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டதாகவும், குறள் கல்வெட்டுக்கள் உருவாக்க அரசு ஆவண செய்யும் என்றும், இந்த இடம் சுற்றுலாத்தலமாக உருவாக்கப்படும் என்றும், இது அரசின் கொள்கை முடிவு என்றும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக ஒப்புதல் கடிதம் எமக்கு வழங்கியுள்ளார்கள்.

 மாதிரிக் கல்வெட்டு

கடந்த 2013 சனவரி மாதம் இந்த மலையிலே மாதிரிக்கல்வெட்டுக்களை, மாமல்லபுரம் சிற்பி திரு.அரவிந்தன் அவர்கள் தலைமையிலே உருவாக்கப் பட்டது. மாதிரி கல்வெட்டில் எழுத்துக்களின் சுமார் 30 அடி தூரத்திலிருந்து படிக்குமளவிற்கு உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அளவு: எழுத்தின் நீளம் 3 அங்குலம், அகலம் 3 அங்குலம், ஆழம் 1 அங்குலம்

திருக்குறள் கல்வெட்டுகள் மாநாடு

திருக்குறள் கல்வெட்டுக்கள் மாநாடு கோவையில் இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு.செ.இராசு அவர்கள்வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு.ராமசாமி அவர்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் திரு.வி.ஜி.சந்தோசம் அவர்கள் சிந்தனைக் கவிஞர் திரு.கவிதாசன் அவர்கள் குறள்செல்வி தேச.மங்கையற்கரசி அவர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகெளரி அவர்கள் கே.எம்.சி.எச் நிறுவனர் டாக்டர் நல்லா.ஜி.பழனிச்சாமி    அவர்கள் கோவை மாநாட்டில் பேருர் ஆதீனம்இளையபட்டம் மருதாசல அடிகளார் அவர்கள் சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்கள் இந்துஸ்தான் கல்வி நிறுவன தாளாளர் திருமதி.சரஸ்வதி அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கல்வெட்டில் திருக்குறள்”ஆய்வு நூல்

மாநாட்டில்  கல்வெட்டில் திருக்குறள் என்ற ஆய்வு நூல் வெளியிடப்பட்டது. கல்வெட்டு ஆராய்ச்சியளர் திரு செ.இராசு அவர்கள், சந்திராயன் திட்ட இயக்குநர் திரு.மயில்சாமிஅண்ணாதுரை அவர்கள், லண்டனைச் சேர்ந்த திரு.புதுயுகன் அவர்கள், திரு.சிற்பி பால சுப்ரமணியம், உள்ளிட்ட பலரும் கட்டுரைகள் எழுதி நூலைச் சிறப்பித்திருந்தார்கள்.

கல்வெட்டுக்கள் ஆய்வுப் பணிகளுக்காக கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு.செ.ராசு அவர்களுடன் எமது குறள் மலைச்சங்கம் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தீவீரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. திரு.செ.இராசு அவர்களின் ஆலோசனைகளும், அறிவுறுத்தல்களும் குறள் மலையை உருவாக்க எமக்குப் பேருதவியாக அமைந்துள்ளது.

பொதுவாக கல்வெட்டுக்களின் மூலமே நமது முன்னோர்களைப் பற்றியும், முன்னோர்களின் வாழ்க்கைமுறை பற்றியும் நன்கு அறிய முடிகிறது.கொங்கு தேசத்தில் பல கல்வெட்டுக்கள் அமைந்துள்ளன. கொங்கு தேசம் என்பது தற்போது கோயமுத்தூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைக் குறிக்கும்.

‘தமிழ்மண்டிலம் ஐந்து’ என்று திருமந்திரமும், ‘வியன் தமிழ்நாடு ஐந்து’ என்று தண்டியலங்காரப் பழைய மேற்கோள்பாடலும் கூறுகின்றன. இதனால் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு, தொண்டை நாட்டுடன் கொங்குநாட்டையும் சேர்த்துத் தமிழ்நாடு ஐந்து என்ற வழக்கம் முன்பு இருந்தது என அறிகின்றோம். பிறகாலச் செப்பேடுகளும், கல்வெட்டுகளும் தொடர்ந்து தமிழ்நாடு ஐந்து என்று பல இடங்களில் தொகுத்துக் கூறுகின்றன.

கொங்குநாடு தமிழ்நாட்டின் பிறபகுதிகளைப் போலவே – அவற்றிற்கும் மேலாகவே திருக்குறளையும் திருவள்ளுவரையும் நினைவு கூர்ந்துள்ளது. திருக்குறள் ஏட்டுப்பிரதிகளை எழுதிக்காத்துள்ளது. உரைபல கண்டுள்ளது, நாட்டுப்பகுதிகட்கும், ஆட்களுக்கும் திருவள்ளுவர் பெயரைவைத்துள்ளனர். திருக்குறளைக் கல்வெட்டில் பொறித்துள்ளனர், அவற்றிற்கும் மேலாகக் கொங்குநாட்டுக் குறுநில மன்னர்கள் தாங்கள் திருக்குறள் நெறிப்படி ஆட்சி புரிந்தோம் என்று கூறி மகிழ்ந்துள்ளனர். நாள்தோறும் செய்யும் செயல்களுக்கும் திருக்குறள் சுவடியைப் பயன்படுத்தியுள்ளனர். இதனை வரலாற்று ஆவணங்களும், இலக்கியங்களும், ஏடுகளும் கூறுகின்றன.

திருக்குறள் கல்வெட்டு

நாமக்கல் மாவட்டம் பொன்சொரி மலையில் உள்ள சமணக் குகையின் மேல் புறம் கி.பி.13-14 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் ‘தன்னூன் பெருக்கற்குத்தான் பிறிதூனுண்பான் எங்ஙனமாளுமருள்’

என்ற திருக்குறள் வெட்டப்பட்டுள்ளது (திருக்குறளைச்சமணர் ‘எம்ஒத்து’ என்று உரிமைகொண்டாடுவர் – நீலகேசிமொக்கலவாதச்சருக்கம் 60,87ஆம் பாட்டின் உரை).

திருவள்ளுவர்

நாமக்கல் மாவட்டம் கபிலக்குறிச்சியில் உள்ள கபில மலையில் இருந்த ஒரு ஆதீனத்தலைவர் பெயர் ‘திருவள்ளுவர்’ என்பதாகும். (மத்தியத் தொல்லியல்துறை கல்வெட்டு ஆண்டறிக்கை, ஆண்டு 1929, எண். 18)

வள்ளுவநாடு

கோயமுத்தூரின் வடமேற்கேயுள்ள ஒரு பகுதிக்கு ‘வள்ளுவநாடு’ என்றுபெயர். இப்பெயர் கல்வெட்டில் காணப்படுகிறது.

திருக்குறள் ஏடுகள்

தருமபுரம் ஆதீனம் வெளியிட்ட ‘திருக்குறள்உரைவளம்’ நூலுக்குப்பரிதி, பரிப்பெருமாள், மல்லர், காலிங்கர் ஆகியோர் உரை எழுதிய ஓலைச்சுவடிகளை அளித்த பெரும் சிறப்பு முன்னாள் தமிழகப்புலவர் குழு உறுப்பினர், அறிவனாரின் சங்ககால இசைநூலான ‘பஞ்சமரபு’ தேடிக்கண்டவர், அமரர் பெரும் புலவர் வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்களை யேசாரும். மொத்தம் 50 ஏடுகளைத் தந்தார். அமரர் வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் இக்கட்டுரையாளரின் ஆசிரியர்). அவ்வுரைகள் திருப்பனந்தாள் காசி மடம் வெளியிட்ட திருக்குறள் உரைக்கொத்திலும் அச்சாகியுள்ளது.

கல்வி ஒழுக்கம் கூறும் ஆதி அவ்வையார் அருளிச்செய்த ‘கல்விஒழுக்கம்’ என்னும் நூல் கொங்கு நாட்டுக் கேயுரியது. அதன் தொடக்கமே ‘அஞ்சு வயதில் ஆதியை ஓது ஆதியை ஓத அறிவுண்டாமே’ என்று தொடங்குகிறது. இது முதற் குறள் கூறும் ‘ஆதிபகவன்’ தாக்கம் எனலாம்.

அரிய பரிதியார் ஏடு

அண்மையில் சேலத்திலும், ஈரோட்டிலும் இரண்டு திருக்குறள் ஏடு கள்பரிதியார் உரையுடன் கிடைத்துள்ளன. ஈரோட்டு ஓலைச்சுவடியில் ஒவ்வொரு அதிகாரத்தலைப்பில் ‘உத்தமம்’ ‘மத்திமம்’ ‘அதமம்’ ‘உத்தமத்தில் மத்திமம்’ போன்றவற்றில் ஏதேனும் ஒன்று எழுதப்பட்டுள்ளது. திருவள்ளுவரை நினைந்து கயிறுபோட்டு சுவடியைத் திறந்து செய்யத் தொடங்கும் செயல்களின் பயன்களை அறியலாம். ‘உத்தமம்’ என்றுள்ள ஏட்டின் பக்கம் வந்தால் நல்லது, ‘அதமம்’ என்று வந்தால் செயலில் ஈடுபடக் கூடாது.வாழ்க்கை நெறிநூல் திருக்குறளை அன்றாட வாழ்வில் கொங்கு மக்கள் பயன்படுத்தியுள்ளனர் என்கிறார் செ.ராசு அவர்கள்.  இவ்வாறாக பழங்காலம் முதலே நம் முன்னோர்கள் குறள் காத்து, குறள் நெறி போற்றி வந்துள்ளனர். மேலும் சங்கம் வளர்த்த மதுரையில் மீனாட்சி அம்மன் ஆலய தெப்பக்குளத்தின் படிக்கட்டுகளிலும், சென்னை திருவல்லிக்கேனியில் உள்ள ஒரு கிணற்றிலும் குறள்களுக்கான கல்வெட்டுக்களைக் காண முடிகிறது. ஆனால் இந்தக் கல்வெட்டுக்கள் அனைத்துமே தனித்தனிக் கற்களில் சுமார் 2 மில்லிமீட்டர் ஆழத்திற்கும் குறைவாகவே அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது  குறள் கல்வெட்டுக்கள் ஒரே பாறையினாலான பெரிய மலையில், எழுத்துக்கள் ஒவ்வொன்றும் சுமார் ஒரு அங்குல ஆழத்தில் அமைக்கப்படவுள்ளது. குறள் மலை உருவாக்கப்பட்ட பின் திருக்குறள் ஆராய்ச்சிக் கூடம் நிறுவியும், விழா மண்டபங்களை உருவாக்கியும், வருடத்தின் 365 நாட்களிலும் தொடர்ந்து திருக்குறள் விழாக்கள் தமிழ் விழாக்கள் இங்கு நடத்தப்படவேண்டும்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டம் மலையப்பாளையத்திலுள்ள மலை இதற்குப் பொருத்தமான மலை என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த மலை சுமார் 20.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட, ஒரே பாறையாளான மலையாகும். 1330 குறளையும் உரிய விளக்கங்களுடன் பதிக்க சுமார் ஏழு ஏக்கர் பரப்பளவே போதுமானது. மீதமுள்ள இடத்தை, நடைபாதை, சிறுவர் விளையாட்டுத்திடல், கார் பைக் பார்க்கிங் போன்ற பயன்பாடுகளுக்காக திட்டமிட்டுள்ளோம். ஈரோடு மாவட்ட ஆட்சியரும் தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகளும் இந்த மலையை ஆய்வு செய்து முடித்துவிட்டார்கள்.   

முதல் குறளை மலையிலே பதித்து 3.7.2016 அன்று திறப்புவிழா நடத்தப்பட்டது. இஸ்ரோ இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களும் நீதியரசர் திரு.மகாதேவன் அவர்களும் முதல் குறளைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள்.  ஒரு குறளின் நீளம் 16 அடி ; அகலம் 5 அடி எழுத்தின் ஆழம் 12 எம்எம்

தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஒன்பது குறள்களை பதிப்பதற்கான அளவீடுகள் ( marking ) செய்யப்பட்டு விட்டன. அதற்கான நுண்கருவிகள் ( tools ) ஜெர்மெனி நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டு விட்டன. ஒரு குறளை உரிய விளக்கங்களுடன் மலையிலே பதிப்பதற்கு மூன்று இலட்ச ரூபாய் செலவு ஆகிறது. திருக்குறளைக் கல்லிலே பதிப்பது ஒரு மிகச்சிறந்த கல்விப்பணியும்கூட என்று சான்றோர்கள்) கூறுகிறார்கள். முழுத்தொகையும் கிடைக்கப் பெற்றதும், சுமார் 36 (முப்பத்தி ஆறு) மாதங்களில்  அனைத்து குறள்களையும் மலையிலே பதித்துவிடமுடியும்.

ஏழு தலைமுறைகளாக கல் உடைக்கும் தொழிலில் இருந்தது, (அதாவது கிணறு வெட்டுவது, பாறை உடைப்பது, காம்பவுண்டு கற்கள் உடைப்பது, சதுர கற்கள் உடைப்பது, ஜவாலி கல் உடைப்பது, பாண்டு கல் உடைப்பது, பில்லூர் டேம், குந்தா டேம், பைகாரா டேம், அப்பர் பவானி டேம், போன்ற பல்வேறு டேம் கட்டியதில் பெரும்பங்கு வகித்தது, மேலும் சிற்பத் தொழிலில் இருந்து வந்தது போன்றவை)  மற்றும் 20 ஆண்டுகளாக திருக்குறள் கல்வெட்டுகள் பற்றிய சிந்தனையிலேயே நாம் இருந்து வருவது போன்ற மிக முக்கியமான காரணங்களால் இது சாத்தியமாகிறது.

மொரிசியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி மேதகு. பரமசிவம்பிள்ளை வையாபுரி குறள் மலையை பார்வையிட்டு பேசுகையில் ஒரு தமிழராக, இந்தியராக, இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன்.  உலக பொதுமறையான திருக்குறள் தனி மனித ஒழுக்கத்திற்கான மிகச்சிறந்த வழிகாட்டுதல் நூல் ஆகும் இந்த நூல் தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் ஆகும் 

இதனை நம் வருங்கால சந்ததியினர்க்கு எடுத்துச்செல்ல மலையப்பாளையம் அருள்மிகு உதயகிரி முத்து வேலாயுத சாமி கோவிலை சுற்றி உள்ள பாறைகளில் 1330 குறள்களையும் விளக்கத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கல்வெட்டாக பதித்து குறள் மலை ஆக்குவதின் மூலம் காலத்தால் அழியா புகழை பெற்று வருங்கால சந்ததியர்களுக்கு வழிகாட்டியாக அமையும் இதற்கு உறுதுணையாக, இதற்கு உறுதுணையாக மத்திய மாநில அரசுகள் இருந்து வருகின்றன குறள் மலை சங்க தலைவர் ரவிக்குமார் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இதனை செயல்படுத்த முனையும் அரசுக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.

குறள்மலைப் பணிகளைப் பாராட்டி 2017ம் ஆண்டு தமிழ்ச்செம்மல் விருது வழங்கி        ஊக்குவித்துள்ளது        தமிழ்நாடுஅரசு.

  1. 1330 திருக்குறளையும் உரிய விளக்கங்களுடன் மலையிலே கல்வெட்டிலே பதித்து குறள்மலை உருவாக்கப்பட வேண்டும்.
  2. அந்தக் கல்வெட்டு அமைந்த குறள்மலையின் அடிவாரத்தில் வருடத்தின் 365 நாட்களிலும் தமிழ் விழாக்கள் நடத்தப்பட வேண்டும். அதற்கான கட்டிடங்கள் தங்கும்விடுதி உணவுக்கூடம் அமைக்கப்படவேண்டும்.
  3. தமிழ்நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் செய்தித் தொலைக்காட்சிகளில், உலகச்செய்திகள், விளையாட்டுச்செய்திகள் ஒளிபரப்புவதைப் போல் தமிழ்ச்செய்திகள் என்ற தலைப்பில் அரை மணி நேரத்திற்கொருமுறை தமிழ்வளர்ச்சிச் செய்திகள் ஒளிபரப்பப்பட வேண்டும்.
  4. உலகில் எந்த இலக்கியமும் மலையில் எழுதப்படவில்லை. முதன்முதலாக மலையில் எழுதப்படும் இலக்கியம் நமது உலகப் பொதுமறை திருக்குறள் என்பதால், திருக்குறளுக்கு உலகநூல் அங்கீகாரம் யுனெஸ்கோவால் வழங்கப்படவேண்டும்.
  5. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்படும் திருக்குறளை, திருக்குறளின் முக்கியக் கருத்துக்களை, ஐக்கிய நாடுகள் சபையில் சட்டமாகக் கொண்டுவர ஆவன செய்யவேண்டும்.

 நூல் வெளியீடுகள்

திருக்குறளை கல்வெட்டுகளாக பதித்து குறள் மலை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு 1999 முதல் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு கூட்டங்கள் கருத்தரங்குகள் விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.

திருக்குறள் கல்வெட்டுகள் மாநாடு 21.09.2014 அன்று கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் சிறப்பாக நடந்தேறியது. விழாவில் கல்வெட்டில் திருக்குறள் பாகம்1 என்ற நூல் தமிழ்நாட்டின் அறிஞர் பெருமக்களால் திருக்குறளை ஏன் கல்வெட்டில் பதிக்க வேண்டும் என்ற கருத்துக்களின் அடிப்படையில் திருக்குறள் ஆய்வு நூலாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் முன்னிலையில்  வெளியிடப்பட்டது.

இந்நூலை கோயமுத்தூர் கோவை மெடிக்கல் சேர்மன் டாக்டர். நல்ல.ஜி பழனிசாமி அவர்கள்  வெளியிட, சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். சரவணம்பட்டி கௌமார மடாலயம் சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சாமிகள், பேரூர் ஆதீனம் பேரூர் தமிழ் கல்லூரி முதல்வர் தவத்திரு. மருதாசல அடிகளார் பெற்றுக் கொண்டார்கள்.

டாக்டர் விஜி சந்தோசம் அவர்கள், எஸ். எஸ். எம். கல்வி குழுமம் சேர்மன்  எம். எஸ். மதிவாணன் அவர்கள், குறள் செல்வி தேசமங்கையர்க்கரசி அவர்கள், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர். சரஸ்வதி கண்ணையன் அவர்கள், டாக்டர். பிரியா அவர்கள், வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் திரு. ராமசாமி அவர்கள், மாவட்டக் கல்வி அதிகாரி டாக்டர்.ஞானகெளரி, மாணவ மாணவிகள் உட்பட சுமார் இரண்டாயிரம் பேர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்கள்.

February 2016 கல்வெட்டில் திருக்குறள் பாகம்2 என்ற நூல் சென்னை தரமணி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வெளியிடப்பட்டது. இந்த நூலை இங்கிலாந்து, இலண்டன் தமிழ் மொழிக் கூடத்தின் தலைவர் தி.ரு சிவாபிள்ளை அவர்கள் வெளியிட, இந்தோனேஷிய தமிழ்ச் சங்கத் தலைவர் திரு விசாகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

மேலும் இவ்விழாவில் கவாலியர் எம்.எஸ். மதிவாணன் அவர்களும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் முனைவர் விஜயராகவன் அவர்களும் மற்றும் 1000 பார்வையாளர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார்கள்.

22.9.2016 அன்று கல்வெட்டில் திருக்குறள் பாகம்3 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கல்லூரியில் வெளியிடப்பட்டது. இந்த நூலை கவாலியர் எம்.எஸ். மதிவாணன் அவர்கள் வெளியிட, சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் 2 ஆயிரம் மாணாக்கர்கள் தமிழறிஞர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

4.10.2017 அன்று கல்வெட்டில் திருக்குறள் பாகம்4 சென்னை லயோலா கல்லூரியில்  வெளியிடப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு என். கிருபாகரன் அவர்கள் வெளியிட, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு ஆர். மகாதேவன் அவர்கள் இந்த நூலைப் பெற்றுக் கொண்டார்கள்.

மேலும் இவ்விழாவில் தமிழ்வளர்ச்சித்துறை இயக்குனரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனருமான முனைவர் விசயராகவன் கவாலியர் எம்.எஸ். மதிவாணன், டாக்டர் வி.ஜி. சந்தோசம், சிந்தனைக் கவிஞர் கவிதாசன், மற்றும் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

03.01.2020 முதல் 05.01.2020 வரை ஈரோட்டில் நடைபெற்ற அனைத்துலக
திருக்குறள் மாநாட்டில் கல்வெட்டில் திருக்குறள் பாகம்5 வெளியிடப்பட்டது.

திருக்குறள் கல்வெட்டுகள் கூட்டங்கள், கருத்தரங்குகள், விழாக்கள், மாநாடுகள்

முக்கிய நிகழ்வுகள்

25.01.2004 ஞாயிறு அன்று மலையப்பாளையம் உதயகிரி முத்து வேலாயுத சுவாமி ஆலயத்தில் அமைந்துள்ள பிரகாரத்தில் திருக்குறள் கல்வெட்டுக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியப் பெருமக்களும், தமிழ் ஆர்வலர்களும், ஊர்ப் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

18.11.2004 வியாழன் அன்று மலையப்பாளையம் மனோகரா அரிசி ஆலை வளாகத்தில் திரு. மனோகர் அவர்கள் முன்னிலையில் திருக்குறள் கல்வெட்டுக்கள் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. கிரிராஜ், சேகர், ராசப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கூட்டத்தைச் சிறப்பித்தனர்.

25.02.2005 வெள்ளிக்கிழமை எம்மாம்பூண்டி முன்னால் மணியகாரர் திரு. ராமசாமி அவர்களின் சின்னத்தோட்ட வளாகத்தில் திருக்குறள் கல்வெட்டுக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

11.01.2007 வியாழன் அன்று மலையப்பாளையம் மலை திருக்குறள் கல்வெட்டுக்கள் பொறிப்பதற்கு ஏற்றதாக உள்ளதா என்றும், இடம் போதுமானதா என்றும் அறிய மலையின் உயரமும் சுற்றளவு அளந்து பார்க்கப்பட்டது.

22.05.2008 வியாழன் அன்று பெருந்துறையில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கத்தினர் பங்கு பெற்ற திருக்குறள் கல்வெட்டுக்கள் ஆலோசனைக் கூட்டம் தலைவர் இரவிக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

20.10.2010 புதன் அன்று ஈங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருக்குறள் கல்வெட்டுக்கள் ஆலோசனைக் கூட்டம் ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கப் பொருளாளர் திரு.ஈங்கூர் சேதுபதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

24.03.2011 வியாழன் அன்று ஈங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருக்குறள் கல்வெட்டுக்கள் ஆலோசனைக் கூட்டம் ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கப் பொதுச்செயலாளர் ஆர்.மாணிக்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

22.01.2012 ஞாயிறு அன்று மலையப்பாளையத்தில் திருக்குறள் கல்வெட்டுக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கல் உடைப்போர் மற்றும் கொத்தடிமைகள் மறுவாழ்வுச் சங்கத்தினர் பங்கு பெற்றனர். அச்சங்கத்தின் தலைவர் திரு. தங்கராசு அவர்கள் கலந்துகொண்டார். அவர் பேசும் போது சுமார் நாநூறு வருடங்களாக தலைமுறை தலைமுறையாக இங்கு கல் உடைக்கும் தொழில் செய்து வருவதாகவும், இங்கு வெட்டியெடுக்கப்படும் கற்கள் ஈரோடு, கோவை, நீலகிரி, கரூர், திருப்பூர், மற்றும் கேரளாவில் பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகக் கூறினா.ர் மேலும் கர்நாடக எல்லையான ஒசூர் வரை மலையப்பாளையம் கற்கள் அனுப்பப்படுவதாகக் கூறினார். ஸ்திரத்தன்மை வாய்ந்த கல்லாக இருப்பதால் தான், இங்கிருந்து எல்லோராலும் வாங்கப்படுகிறது என்றும் இந்த மலை மிகவும் உறுதியானது என்றும் தெரிவித்தார்.

03.11.2013 ஞாயிறு அன்று ஈரோடு கொங்கு கலையரங்கில் திருக்குறள் கல்வெட்டுக்கள் கலந்தாய்வுக் கருத்தரங்கம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. கணேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் புலவர் செ. ராசு அவர்கள், வளர்தமிழ் இயக்கத்தின் செயலர் திரு. அப்பாவு அவர்கள், சிந்தனைப் பேரவைத்தலைவர் திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள், சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

2014 ஜனவரி மாதம் கல்வெட்டுப்பணிகளில் சிறந்து விளங்கும் மாமல்லபுரம் சிற்பி திரு. அரவிந்தன் அவர்கள் தலைமையில் மாதிரி கல்வெட்டுக்கள் உருவாக்கப்பட்டது.

11.02.2014 அன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு சண்முகம் அவர்கள் தலைமையில் திருக்குறள் கல்வெட்டுக்கள் அமைப்பதற்காக மலை ஆய்வு செய்யப்பட்டது. ஆட்சியருடன் பயிற்சி ஆட்சியர்கள், வட்டாட்சியர், வட்டார அலுவலர், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அரசு அலுவலர்களும் இந்த ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். மாதிரி கல்வெட்டுக்கள் பார்வையிட்டு, வெகுவாகப் பாராட்டிச் சென்றனர்

11.05.2014 ஞாயிறு அன்று காலை 11 மணியளவில் மலையப்பாளையம் உதயகிரி முத்துவேலாயுத சுவாமி ஆலயத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கோபி சட்டமன்றஉறுப்பினர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் தலைமையேற்று விழாவை நடத்தினார். ஓய்வு பெற்ற ஆசிரியர் பெருமக்களும் ஊர்ப் பொதுமக்களும் பெருவாரியாகக் கலந்து கொண்டனர்

16.06.2014 அன்று இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி முதல்வர்   திரு.பாலுசாமி அவர்கள் தலைமையில் திருக்குறள் கல்வெட்டுக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை சுற்றுப் புறத்திலுள்ள கல்லூரி பேராசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்

21.10.2014 அன்று திருக்குறள் ஏன் கல்வெட்டுக்களாக்கப்பட வேண்டும் என்பது பற்றி “திருக்குறள் கல்வெட்டுக்கள் மாநாடு” கோவை மெடிக்கல் நிறுவனர் திரு. நல்ல ஜி.பழனிச்சாமி அவர்கள், தலைமையில் நடைபெற்றது. இதில் திரு.வி.ஜி.சந்தோசம் அவர்கள், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் செ. ராசு அவர்களும், வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு. ராமசாமி அவர்கள், மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி. ஞானகௌரி அவர்கள், பேரூர் தமிழ்க் கல்லூரி முதல்வர் இளையபட்டம் மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்கள், தமிழாசிரியர் கழகத் தலைவர் திரு. நஞ்சப்பன் அவர்கள் மேலும் பல கல்லூரி முதல்வர்களும், மாணாக்கர்களும் ஆசிரியப்பெருமக்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் குறிப்பாக இந்த மாநாட்டில் கல்வெட்டில் திருக்குறள் பாகம் 1 என்ற நூல் வெளியிடப்பட்டது.

17.05.2015 அன்று ஈரோடு மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் திருமதி சந்திரா அவர்கள் தலைமையிலான குழு திருக்குறள் கல்வெட்டுகள் அமையவுள்ள மலையை ஆய்வு செய்யப்பட்டது. மலையை சுற்றியுள்ள மக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு, குறள் மலை வீடியோ பதிவு செய்து அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

27.10.2015 அன்று குறள் மலையை  இறுதி ஆய்வு செய்து, திருக்குறள் கல்வெட்டுக்கள் பொறிப்பதற்கு ஏற்ற மலை இது என்று, அரசுக்கு அறிக்கை அறிக்கை சமர்ப்பித்துள்ளார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. பிரபாகர் அவர்கள். 

16.01.2016 திருவள்ளுவர் தினத்தன்று இலண்டன் தமிழ்மொழிக்கூடத்தின் இயக்குநர் திரு. சிவாபிள்ளை அவர்கள் தலைமையில் கல்வெட்டில் திருக்குறள் அமைப்பது பற்றிய பன்னாட்டுக் கலந்தாய்வு நடத்தப்பட்டது. முதல் திருக்குறளை மலையிலே பதிப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டன.

07.03.2016 அன்று கல்வெட்டில் திருக்குறள் பாகம்2 நூல் வெளியிடப்பட்டது. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநர் முனைவர்கோ. விசயராகவன் அவர்கள் தலைமையில் தமிழ்மொழிக்கூடத்தின் இயக்குநர் திரு. சிவாபிள்ளை அவர்கள் நூலை வெளியிட, இந்தோனேசியத் தமிழ்ச் சங்கத் தலைவர்   திரு. விசாகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

03.07.2016 அன்று முதல் திருக்குறள் மலையிலே கல்வெட்டிலே பொறிக்கப்பட்டு உலகத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டது. முதல் குறள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. ஆர். மகாதேவன் அவர்கள். விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், குமாரபாளையம் எஸ் எஸ் எம். கல்லூரிகளின் தாளாளர் திரு. மதிவாணன் அவர்கள், சிந்தனைக்கவிஞர் டாக்டர் கவிதாசன் அவர்கள், திரு.வி.ஜி.சந்தோசம் அவர்கள், திரு. சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள், ஆகியோரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

16.09.2016 அன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கல்லூரியில் கல்வெட்டில் திருக்குறள் பாகம்3 வெளியிடுவதற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு, ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

15.12.2017   உலகத் தமிழ்க்கழக பெரம்பலூர் மாவட்ட உறுப்பினரும், திருக்குறள் ஞானமன்றப் பொறுப்பாளருமான திரு.பூங்குன்றன் ஜெயராஜ் அவர்கள், திரு.குறளடியான், திரு.செந்தமிழ்வேந்தன் ஆகியோர் தலைமையில்  கல்வெட்டில் திருக்குறள் அமைப்பது பற்றிய கலந்தாய்வு நடத்தப்பட்டது

16.12.2017 பெரம்பலூர், சிறுகளத்தூரில் ஓவியர் திரு.முத்துக்குமரன் அவர்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் மணிமண்டபத்தில், திரு.குறளடியான், திரு.செந்தமிழ்வேந்தன்,  ஆகியோருடன் திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு நடைபெற்றது. 

17.12.2017 ஜெயங்கொண்ட சோழபுரம் திருவள்ளுவர் ஞானமன்றத்தில் நடந்த நிகழ்வு… திரு.பன்னீர்செல்வம்,திரு.முத்துக்குமரன், திரு.செந்தமிழன், திரு.குறளடியான் ஆகியோருடன் கல்வெட்டுகள் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

10.4.2018 புதுச்சேரியில், தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர்.முத்து அய்யா அவர்களுடன் திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வின் நடைபெற்றது… மேனாள் மாவட்டக் கல்வி அதிகாரி திரு.பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் திரு.அறிவுடைநம்பி அவர்களும் கலந்துகொண்டனர்.

25.6.2018 மதுராந்தகம் குருகுலத்தில் அடிகளார் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரி அவர்களுடன்… திரு.பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் திரு.அறிவுடைநம்பி அவர்களுடனும் கல்வெட்டுகள் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

14.07.2018 அன்று குறள்மலை விழாவை மாண்பமை உயர்நீதிமன்ற நீதியரசர் என்.கிருபாகரன் அவர்கள் தலைமையேற்று நடத்திய குறள்மலை புத்தக வெளீயிட்டு விழாவை”பொள்ளாச்சி மகாலிங்கம் அரங்கம் ஓ.பி.ஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் வடலூரில் நடைபெற்றது. சங்கர் வானவராயர் தலைவர்.      கல்லூரியின் தாளாளர் டாக்டர்.இரா.செல்வராஜ் அவர்கள், திரு.வி.ஜி.சந்தோசம் அவர்கள், திரு.எம்.எஸ்.மதிவாணன், அவர்கள், சிந்தனைக்கவிஞர் திரு.கவிதாசன் அவர்கள், திரு.சாம் அவர்கள் பிரான்ஸ்,, ஆகியோர் கலந்து கொண்டு குறள்மலை விழாவை சிறப்பு செய்தனர்

04.08.2018 அன்று அறிஞர் செ.இராசு அவர்களுடன் நாம் நடத்திய திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு…இந்தியத் தொல்லியல் துறையின் உயர்அதிகாரி திரு.ஸ்ரீராமன், கீழடி தொல்லியல் ஆய்வாளர் திரு.வேதாச்சலம், மதுரை தொல்லியல் ஆய்வாளர் திரு.சாரங்கதரன், கொடுமணல் ஆய்வாளர் திரு.இராமச்சந்திரன்ஆகியோருடன், ஈரோட்டில் திருக்குறள் கல்வெட்டுகளின் வரலாற்று முக்கியத்துவம் பற்றி ஆராயப்பட்டது.

22.02.2019 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முப்பெரும் விழாவான திருக்குறள் கல்வெட்டுகள் விழாவில் இயக்குநர் முனைவர் விசயராகவன், திரு வி ஜி சந்தோசம், திரு சி.இராஜேந்திரன், துணைவேந்தர் வணங்காமுடி, இலண்டன் திரு. சிவாபிள்ளை, திரு. மெய்ஞானி பிரபு, முனைவர். ஜானகி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருக்குறள் பன்னாட்டு கருத்தரங்கம்

11.12.2018 சேலம் ஸ்ரீ சக்தி கைலாஷ் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையும், குறள்மலைச் சங்கமும், இணைந்து நடத்திய நவீனத்துவத்தின் வழிகாட்டி பாரதி என்று பாரதி விழாவில்,  இங்கிலாந்து லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் திரு. சிவாபிள்ளை அவர்களும் கல்லூரி தாளாளர்களும், பேராசிரியர்களும், கல்லூரி மாணவ மாணவியர் சுமார் 500 பேர் கலந்துகொண்டனர்.

12.12.2018 அன்று ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி தமிழ்த்துறையும் குறள் மலைச் சங்கமும் இணைந்து நடத்திய திருக்குறள் பன்னாட்டு கருத்தரங்கில் லண்டனைச் சேர்ந்த திரு. சிவா பிள்ளை அவர்கள், சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் கலந்து கொண்டனர்

27.6.2018  அன்று திருக்குறளை உலக நூலாக்க வேண்டும், திருக்குறள் உலக அங்கீகாரம் பெறவேண்டும் என்ற நோக்கிலும், திருக்குறளை கல்வெட்டில் பதிக்கும் நமது குறள்மலை செய்திகள் உலகெங்கும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற நோக்கத்துடனும் இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக திருக்குறள் மாநாட்டில் குறள்மலை பற்றிய வீடியோ பதிவு திரையிடப்பட்டு அரங்கத்தில் கூடியிருந்த அனைவராலும் வெகுவாக பாராட்டைப் பெற்றது. அந்த மாநாட்டிற்கு வருகை புரிந்திருந்த உலக நாட்டு மொழியியல் வல்லுனர்கள் அனைவரும் இந்த குறள்மலையைப் பற்றியும் ஆர்வமுடன் கேட்டு அறிந்து கொண்டார்கள்.

2.3.2018 அன்று மொரீசியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி மேதகு பரமசிவம் பிள்ளை வையாபுரி அவர்கள் மொரிசியஸ் நாட்டிலிருந்து, இந்தியாவிற்கு வந்து குறள்மலையை பார்வையிட்டார். குறள்மலையை பார்வையிட்ட பின், தமிழ் மலையில் ஏறி விட்டது. இனி நமது தமிழ் உயர்ந்த மொழிகளில் ஒன்றாக திகழும். உலகத்தின் முதல் மொழியாக வரக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது என்று பாராட்டியதோடு, தமிழ்நாடு அரசுக்கு தம் நன்றிகளைத் தெரிவித்தார் .

அதோடு மொரிசியஸ் நாட்டிற்கு நம்மை வரும்படியும் அந்த நாட்டு மக்களுக்கும் அங்கு இருக்கும் தமிழ் லீக், டி டி எஃப் போன்ற அமைப்பிலும் குறள்மலை சொற்பொழிவு நிகழ்த்துமாறு  கேட்டுக் கொண்டார்.

31.1.2019 அன்று மேதகு துணை ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி அவர்கள் வேண்டுகோளை ஏற்று, நமது குறள் மலைக் குழு மொரிசியஸ் புறப்பட்டு ஒரு வார காலம் அங்கு தங்கி இருந்து, அங்கு உள்ள தமிழ் அமைப்புகளோடு கலந்துரையாடி, அங்குள்ள பேராசிரியர்களுக்கும் குறள் மலையின் அவசியத்தை எடுத்துரைத்தோம். அந்த நாட்டு தமிழ் அமைப்புகளும் குறள்மலையை உருவாகுவதற்கு நாங்கள் உதவி செய்வோம் என்று ஆர்வத்துடன் அறிவித்தனர்.

03.03.2019 அன்று குறள்மலை பணிகளில் ஓர் அங்கமாக, மொரீசியஸ் நாட்டில் இலக்குவனார் தமிழ்ப்பள்ளியில் இலக்குவனார் படத்தை திறந்து வைத்து, குறள்மலை கருத்தரங்கம்  தமிழ் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் நடைபெற்றது. அன்று பிரான்ஸ் நாட்டின் சாம்விஜய்  அவர்களும்  கலந்து  கொண்டார்

18.02.2019 அன்று யுனெஸ்கோ நிறுவனத்தின் மேனாள் இயக்குனரும் மொரீசியஸ் நாட்டின் மேனாள் கல்வி அமைச்சருமான திரு. ஆறுமுகம் பரசுராமன் அவர்களை சந்தித்து, குறள்மலையை பற்றி நீண்ட கலந்தாலோசனை செய்யப்பட்டது

28.1.2019  அன்று கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில், இலண்டன் திரு. சிவாபிள்ளை ஐயா அவர்களும், சிங்கப்பூர் திருமதி லட்சுமி அம்மா அவர்களும், கல்லூரி தாளாளர் மற்றும், தமிழ்துறை தலைவர்,மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் ஆகியோருடன் திருக்குறள் கல்வெட்டுக்கள் கருத்தரங்கம், பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் நடந்தேறியது.

22.02.2019 குறள் மலைச் சங்கம் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம் எஸ்.எஸ்.எம் கல்விக்குழுமம், விஐடி பல்கலைக் கழகத்தின் தமிழியக்கம் அமெரிக்காவின் வேதா நிறுவனம் ஆகியவற்றோடு இணைந்து குறள் மலைச்சங்கம் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம். விஐடி பல்கலைக்கழக நிறுவனர் டாக்டர்.விஸ்வநாதன் மற்றும், நாஸா விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி, மேத்யூ ஒட்டிவ்யானி கலந்துகொண்டுவிழாவைச் சிறப்பித்தனர்.

27.2.2019 அன்று கோயமுத்தூரின் முதன்மை கல்வி நிறுவனமாக திகழும் பி.எஸ்.ஜி.கிருஷ்ணம்மாள் கல்லூரியில், அக்கல்லூரியின் நூற்றாண்டு விழாவில், குறள்மலைச் சங்கம்  கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்தரங்கை சிறப்பித்தார்கள். மேலும் அந்த விழாவில் திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கப்பட்டன.

25.2.2019 அன்று குறள்மலைச் சங்கமும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய முப்பெரும் விழாவில் வி.ஜி.பி உலகத் தமிழ்ச் சங்க நிறுவனர் டாக்டர் வி.ஜி சந்தோஷம் உள்பட, 27 பேருக்கு குறள்மலை செம்மல் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது

23.3.2019 அன்று ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற இதயம் வென்ற இந்திய பயணம், என்ற நூல் வெளியீட்டு விழாவின்போது, குறள்மலை சிறப்பு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த நூலை எழுதியவர் நண்பர் செழியன் அவர்கள். மொரீசியஸ் நாட்டின் துணை ஜனாதிபதியின் இந்திய பயணக்குறிப்பு தான் இந்த நூலின் தலைப்பாக மாறி இருக்கிறது

27.3.2019 அன்று மொரிசியஸ் ஜனாதிபதி மேதகு பரமசிவம் பிள்ளை வையாபுரி அவர்கள் குறள்மலைச் சங்கத்தின் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.

8.4.2019 அன்று திருக்குறள் கல்வெட்டுகளின் அவசியத்தை வலியுறுத்தி தமிழகத்தின் பல பள்ளிகளில் குறள் மலைச்சங்கம் சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு மாணிக்கம்
மற்றும் பொறுப்பாளர்கள், தலைமை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியைகள் தலைமையில் பல கருத்தரங்கங்கள்  நடத்தப்பட்டன

12.5.2019 அன்று நாகர்கோவிலைச் சேர்ந்த முனைவர் நா.பத்மநாபன் அவர்கள் தலைமையில், கன்னியாகுமரியில் திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு  நடைபெற்றது.

7.7.2019 அன்று திருச்சியில் நடைபெற்ற குறள் மலை கவியரங்கில் நாடெங்கிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் வந்து குறள் மலையைப்பற்றி கவிமழை பொழிந்தார்கள். மிகச் சிறப்பாக நடைபெற்ற இக் கவியரங்கில் அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளர் திரு.துரைசாத்தனன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

19.5.2019 அன்று கும்பகோணத்தில் குறள் மலைச்  சங்கத்தின் 20 ஆவது ஆண்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் கிருபாகரன் அவர்கள் கலந்துகொண்டு”திருக்குறள் மாமலை” என்ற மாத இதழை வெளியிட்டார். திருக்குறள் மாமலை மாத இதழ் தமிழ் செய்திகளையும் தமிழ் வளர்ச்சிச் செய்திகளையும் தாங்கிய ஒரு இதழாக வந்துகொண்டிருக்கிறது. குறள் செய்திகள் அதில் முக்கியமாக இடம் பெற்றவையாக இருக்கும்.

31.7.2019 அன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அனைத்துலக திருக்குறள் மாநாட்டில் நாம் கலந்துகொண்டு திருக்குறள் ஆராய்ச்சி கட்டுரை வழங்கினோம். மேலும் திருக்குறளை கல்வெட்டில் பதிக்கப்பட வேண்டும் என்பதற்கான வீடியோ பதிவுகளையும் அரங்கத்தில் திரையிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து ஆஸ்திரேலிய நாட்டின் மொழியியல் வல்லுனர்கள் ”எங்கள் நாட்டில் பத்து திருக்குறள் கல்வெட்டில் செதுக்கி கொடுங்கள்” என்று அன்றைய தினமே வேண்டுகோள் விடுத்தார்கள். அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, குறள் மலையில் அனைத்து திருக்குறளையும் கல்வெட்டில் பதித்து விட்டு, அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் பதிக்கலாம் என்றும், ஆஸ்திரேலியாவில் மட்டுமன்றி உலக நாடுகளில் எங்கெல்லாம் மலைகள் இருக்கிறதோ, எந்தெந்த நாடுகள் வேண்டுகோள் விடுக்கின்றனவோ, அங்கெல்லாம் நாம் திருக்குறளை மலையில் அந்தந்த மொழிகளில் மொழிபெயர்த்து பதிக்கலாம் என்று அவர்களிடம் கூறி விட்டு வந்தோம்.

20.9.2019 அன்று குறள் மலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அரசு இதற்காக வேகமாக பரிசீலனை முடித்து ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சுமார் 3 ஆயிரம் மாணவ மாணவிகள், பேராசிரியப் பெருமக்கள், கல்லூரி தாளாளர்கள், கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி, குறள் மலை பேரணி ஈரோட்டில் நடத்தப்பட்டது. பேரணியின் முடிவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறள் மலை பணிகள் விரைந்து முடித்து திறப்பு விழா காண ஆவண செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

24.9.2019 அன்று டெல்லி யுனெஸ்கோ அரங்கில் நடைபெற்ற உலக திருக்குறள் மாநாட்டில் நாம் கலந்துகொண்டு திருக்குறள் கல்வெட்டுகள் பற்றிய அவசியத்தையும் திருக்குறள் விரைவில் உலகநூல் அங்கீகாரம் பெற வேண்டியதன் அவசியம் வலியுறுத்தி திருக்குறள் ஆராய்ச்சிக் கட்டுரை வழங்கினோம். அது அனைவராலும் பாராட்டப்பட்டது.

உலக திருக்குறள் மாநாடு 2020

03.01.2020 முதல் 05.01.2020 வரை ஈரோட்டில் நடைபெற்ற அனைத்துலக திருக்குறள் மாநாட்டில், பல்கலைகழகத் துணைவேந்தர்கள்,  11 நாடுகளைச் சேர்ந்த மொழியியல் வல்லுனர்கள், கல்லூரித் தாளாளர்கள், கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழகத் துறைத் தலைவர்கள், கல்லூரித் துறைத் தலைவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், 2000 மாணாக்கர்கள், தமிழறிஞர்கள் என அனைவரும் கலந்துகொண்டு மாநாட்டை சிறப்பித்தார்கள். மாநாட்டில் முக்கியமான மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு யுனெஸ்கோவின் மேனாள் இயக்குனரும், மொரிஷியஸ் நாட்டின் கல்வி அமைச்சருமாகிய மொரீசியஸ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் கோ.விசயராகவன்  பல்கலைக்கழக துணைவேந்தர்கள், 15 கல்லூரி முதல்வர்கள், 12 கல்லூரித் தாளாளர்கள், மற்றும் செயலர்கள், 11 நாடுகளைச் சேர்ந்த மொழியியல் வல்லுனர்கள், 2 ஆயிரம் மாணவ-மாணவிகள், தமிழ் அறிஞர்கள் ஆகியோரால் வழிமொழியப்பட்ட, இந்தத் தீர்மானம் மேனாள் யுனெஸ்கோ இயக்குனர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

யுனெஸ்கோ தீர்மானங்கள்

  1. 1330 திருக்குறளையும் மலையிலே கல்வெட்டில் பதித்து திருக்குறள் மலை உருவாக்கப்பட வேண்டும்.*
  2. மலையிலே கல்வெட்டில் பதிக்கப்படும் திருக்குறளை உலக நூலாக யுனெஸ்கோ நிறுவனம் அங்கீகரிக்க வேண்டும்.*
  3. உலக நூலாக அறிவிக்கப்பட இருக்கும் திருக்குறளை ஐக்கிய நாடுகள் சபை தன் உறுப்பு நாடுகள் அனைத்திலும் பாடத்திட்டமாக திருக்குறளை சேர்க்க ஆவண செய்யவேண்டும்.*

Youtube   :  https://www.youtube.com/channel/UCnTiwclbLAINu2i6v4vyvZA